சூப்பர் ஸ்டாரை (ரஜினி) தமிழ்நாட்டின் நரேந்திர மோடியாக்க..


சூப்பர் ஸ்டாரை (ரஜினி) தமிழ்நாட்டின் நரேந்திர மோடியாக்க முயற்சித்து வருவதாக துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.நரேந்திர மோடியின் பொதுமேடை பிரச்சார தொகுப்பை அலையன்ஸ் நிறுவனம் 'கல்வியே கற்பகத் தரு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதற்கான விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது.விழாவுக்கு மோடி தலைமை வகித்தார். அரசியல் விமர்சகர் சோ ராமசாமி புத்தகத்தை வெளியிட நல்லி குப்புசாமி செட்டி அதை பெற்றுக் கொண்டார்.

விழாவில் சோ ராமசாமி பேசுகையில்,

பாஜகவுக்கு இப்போது இலங்கை தமிழர்கள் மீது காதல் வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது நடத்தி வரும் போரை நிறுத்துங்கள் என குரல் கொடுத்திருக்கிறது. இலங்கை அரசு அங்குள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதை எப்படி நிறுத்தச் சொல்ல முடியும்?.

காஷ்மீரில் இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறினால் ஏற்க முடியுமா? எனது இந்த கருத்தை எந்த மேடையிலும் கூற எனக்கு உரிமை இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் என்னை இதை பேச சொன்னாலும் தைரியமாக இந்த கருத்தை வலியுறுத்துவேன். இந்த பிரச்சனையில் தெளிவான முடிவை எடுத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா தான்.

இங்கே பேசியவர்கள் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் சூப்பர் ஸ்டாரை தமிழ்நாட்டின் மோடியாக்க வேண்டும் என முயற்சிக்கிறேன். இது தான் சிறப்பாக இருக்கும். மோடியின் சாதனைகள் குஜராத்துடன் நின்றுவிடக் கூடாது. தேசிய அளவில் வளர வேண்டும், வளரும் என்றார் சோ.
நரேந்திர மோடி அன்புள்ள தமிழ் அன்பர்களே, என்று தமிழில் தனது பேச்சை தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவர் கூறுகையில்,

மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்திருக்கிறேன். இதுவரை ஒரு சிறு குற்றச்சாட்டு கூட எனது அரசு மீது யாரும் கூறியதில்லை. ஏன் தேர்தல் நேரத்தில் கூட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தவில்லை. கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி முஸ்லிம் இளைஞர் எனது அரசு சிறப்பாக செயல்படுவதாக கூறியதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

ஆனால் நான் கேரளாவில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தை பற்றி அறிந்து அதனை குஜராத்திலும் நடைமுறைப்படுத்தினேன். நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவை இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தனர். இதனால் மக்கள் சோர்ந்து விட்டார்கள். அந்த இரண்டு குடும்பங்களையும் வீழ்த்து ஒபாமா அதிபராகி உள்ளார்.

இந்தியாவிலும் அந்த நிலை தான் இருக்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இங்கும் குடும்ப அரசியலாகத் தான் இருக்கிறது. இதில் பாரதீய ஜனதா கட்சி மட்டுமே தனித்து விளங்குகிறது. அமெரிக்க மக்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். குடும்ப அரசியலில் இருந்து வெளியில் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுவது எனக்கு தெரியும். ஆனால் குஜராத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. குஜராத்தில் 18 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. பிரதமரின் வீட்டுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்குமோ, அந்த வசதிகள் அந்த கிராமங்களிலும் கிடைக்கும்.

அனைத்து கிராமங்களிலும் பிராட்பேண்ட் வசதி உள்ளது. இந்த வசதி மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து 5ம் வகுப்பு மாணவர்களுடன் பேச இருக்கிறேன். அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறேன் என்றார் மோடி.

0 comments: