ரஜினியும் - கமலும்


தென்னிந்தியத் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- கலைஞானி கமல்ஹாசன் இருவரும் கன்னட சினிமாவின் 75ம் ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

கன்னட சினிமாவுக்கு இது 75வது ஆண்டு. இதனைக் கொண்டாடும் வகையில் பெங்களூரில் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் மிகப் பெரிய திருவிழா அளவுக்கு நடைபெற உள்ளன.

தமிழ் சினிமாவை என்னதான் புறக்கணிக்க முயன்றாலும் டப்பிங் படங்களாக, ரீமேக் படங்களாக மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவுடன் கன்னடத் திரையுலகம் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது.

இன்னொரு பக்கம், இன்று இந்தியாவின் பெரிதும் மதிக்கப்படும் முதல்நிலை நாயகர்களான ரஜினியும் கமலும் கன்னடத் திரையுலகுக்கு ஆரம்ப கட்டத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

கதாசங்கமம், சகோதர சவால், கலாட்டே சம்ஸாரா.. என பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார் ரஜினி. கமலும் சளைத்தவரல்ல.. பெங்கியல்லி அரலித ஹூவு, மரியா மை டார்லிங், ராமா ஷாமா பாமா என அவரும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த இரு சாதனையாளர்களுமே விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருப்பது கன்னடத் திரையுலகினரை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அம்ருதா மஹோத்ஸவா எனும் பெயரில் நடக்கும் இந்த திரைத் திருவிழாவை கர்நாடக அரசும் கர்நாடக பிலிம் சேம்பரும் நடத்துகின்றன. இவர்களுடன் உதயா டிவி மற்றும் சன்பீஸ்ட் குரூப் நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

நாளை மார்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விழாவைத் துவக்கி வைக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

ரஜினி, கமல் தவிர தெலுங்கு, மலையாளத் திரையுலக முக்கிய பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

'ரஜினி- கமல் இரு சாதனையாளர்களும் விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டதே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த விழாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இதைக் கருதுகிறோம்', என்று கன்னட பிலிம் சேம்பர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: