Fans Clarification !


தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட்டுவிட்டார் ரஜினி. 'தான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உறுதியாக தெரிவிப்பேன். ஆனால் அதுபற்றி இப்போதே எந்த முடிவுக்கும் வராதீர்கள், எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். பிடித்த கட்சியில் சேர்ந்து செயல்படுங்கள். கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் கூப்பிட்டுக் கொள்கிறேன்' என்பது தலைவரின் ஆணை.


அதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.


அவரிடமிருந்து ஏதாவது ஒரு தீர்மானமான அறிவிப்பு வரவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகவும் இருந்தது. அரசியலுக்கு வருவதாக இருந்தாலும் சரி... வராமல் போனாலும் சரி.


‘இப்போதைக்கு வரவில்லை... வரும்போது நானே சொல்கிறேன்...’ இது அவர் வழி!


இதைச் சொல்வதற்கு எத்தனை நிதானம், தன்னம்பிக்கை வேண்டும் என எண்ணிப் பாருங்கள்.


இப்போது நமது ரசிக நண்பர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதெல்லாம், தலைவரின் எண்ணத்துக்கு ஏற்ப நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ...அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல், ஒரு பொதுவான தளத்தில், தலைமையை மீறாமல் செயல்படத் துவங்குவோம்.


இந்த அறிக்கையை பாஸிடிவாக நினைத்து உற்சாகப்படும் நண்பர்களும் சரி... எதிர்மறையாக எடுத்துக் கொண்டு புலம்புபவர்களும் சரி... நிதானத்துக்கு வர வேண்டிய ஒரு புள்ளியாக இந்தச் சூழலை எடுத்துக் கொள்வதே சரியானது.


எந்திரனில் முழுக் கவனம் செலுத்தி ஒரு உலகத் தரமான படத்தைத் தரட்டும் நம் தலைவர். அந்தப் படத்தின் மூலம் உலக சூப்பர்ஸ்டார் என்ற உன்னத புகழை அடையட்டும். அதன்பிறகு அவர் மனம்போல் எடுக்கட்டும், எந்த முடிவையும்.

அதெல்லாம் சரி... ரசிகர்களுடனான சந்திப்பு அவ்வளவுதானா?

இதற்கு ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா கூறியுள்ள பதில் இது:


நிச்சயம் பார்ப்பார். கொஞ்சம் அமைதியாக இருங்கள். இலங்கைத் தமிழர் ஆதரவுப் பிரச்சினை, எந்திரன் அடுத்த கட்ட ஷெட்யூல் போன்ற பல விஷயங்களில் இப்போது அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


கண்டிப்பாக சந்திப்பார். அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது.


இனி நான் எந்த தேதியையும் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டேன். அவர் சொல்லும்போது அறிவிப்பேன். அவ்வளவுதான்!


-Sanganathan

0 comments: