ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!



சில நேரங்களில் நாம் சொல்ல வருவது ஒரு விஷயமாக இருக்கும், ஆனால் போய்ச் சேர்ந்தது வேறொரு விஷயமாக இருக்கும். திரைப்பட விமர்சகர் விருது வழங்கும் விழாவில் நடந்ததும் அம் மாதிரி ஒரு சின்ன தவறுதான். ஆனால் அது உலகம் முழுக்க ரஜினி ரசிகர்களிடையே இப்படியொரு எதிர்ப்பைச் சம்பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. ரஜினியைத் தவறாகப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை’, என அமீர் விளக்கம் தெரிவித்தார்.
நேற்று அமீரின் எல்லை மீறிய பேச்சு குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இதுபற்றி இணைய தளங்களிலும் விரிவான செய்திகள் வெளியாகியிருந்தன. இன்று மாலை சுப்பிரமணியபுரம் படத்தின் 100வது நாள் விழாவுக்குப் பிறகு அமீர் நம்மிடம் பேசினார்.
நான் ரஜினி சாரைத் திட்டிப் பேசினதா பரவலா செய்தி வந்திருக்கு. ரஜினி சார் காதுக்கும் போயிருக்கும். அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. கேக்கவும் மாட்டார். அவரது குணம் எனக்குத் தெரியும்.
உண்மையில் நான் அவரைத் தாக்கிப் பேசவில்லை... நான் சொல்ல வந்தது ஒரு விஷயம். ஆனால் புரிந்து கொள்ளப்பட்டது வேறு விஷயம்.
ஒகேனக்கல் பிரச்சினையில் ரஜினி சாருக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவம்தான் எனக்கும். ரஜினி சார் நல்ல நடிகர். இந்தியாவில் அவருக்கு நிகரான நடிகர்கள் யாருமில்லை என்பதெல்லாம் சின்ன புள்ளைக்கு கூடத் தெரியும். அதை நான் சொல்லி மாற்ற முடியாது.
ஆனால் அவர் பெயரை மலிவான விளம்பர உத்திக்காகப் பயன்படுத்து கிறார்கள். விளம்பரத்துக்காக விருது கொடுத்து கேவலப்படுத்துகிறார்கள். இதை ரஜினியே விரும்ப மாட்டார் என்பதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
ஆனால் சற்று உணர்ச்சி வேகத்தில் தடித்த வார்த்தைகள் வந்துவிட்டன.
ஆனால், ஒரு ரசிகனின் பார்வையில் என் பேச்சு எப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளப்படும் என்று எனக்கும் புரிகிறது. அதனால் இந்த விளக்கத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அதற்காக வருத்தப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, ரஜினி சார் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவரது நடிப்பின் உயரங்களைக் காட்டக் கூடிய கதைகளை அவர் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் எந்தக் கதையாக இருந்தாலும், எந்த வேடமாக இருந்தாலும் அதில் மிகச் சிறந்த நடிப்பு இருந்தால்தானே மக்களிடம் எடுபடும் என்ற உங்கள் கருத்தையும் ஏற்கிறேன். எல்லாராலும் ரஜினி மாதிரி நடித்துவிட முடியாது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.
பாப்புலாரிட்டி அடிப்படையில்தான் விருது என்றால், இன்னும் பத்து வருசத்துக்கு ரஜினிக்குதான் விருது தரப்பட வேண்டும். அவருக்குதான் நாட்டிலேயே அதிக ரசிகர்களும் உள்ளனர் என்று நான் சொன்னதையும் நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம், என்றார்.
நல்ல கதை எனப் பாராட்டப்படும் படங்கள்தானே சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் விருது வழங்கும்போது அப்படியா நடக்கிறது? என்ற நம் கேள்வியைப் புரிந்து கொண்ட அமீர், 'உண்மைதான். இந்தச் சம்பவத்தில் நானே பல உண்மைகளைப் புரிந்து கொண்டேன்' என்றார்.
இந்த விழாவில் தமிழன் கலாச்சாரம் குறித்து அமீர் பேசியவற்றை யாருமே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்... ஆனால் அந்தக் கருத்து இங்கு பொருத்தமில்லாதது என்பதால் நம் எல்லையோடு நிறுத்திக் கொள்கிறேன்...)
இனி இந்த விவகாரத்தில் முடிவை ரசிகர்களிடம் விட்டுவிடுவோம்! மற்றபடி நம் உணர்வுக்கு மதிப்பளித்து, அதற்கு பதிலும் அளித்த விதம் அமீர் பக்குவப்பட ஆரம்பித்திருப்பதைக் காட்டுகிறது. நல்ல விஷயம்தான்!

-சங்கநாதன்-Rajinifans.com

0 comments: