Rajini Join Maniratnam after THALAPATHY



17 வருடங்களுக்குப்பின், மீண்டும் இணைகிறார்கள்
ரஜினிகாந்த் புதிய படம் மணிரத்னம் டைரக்டு செய்கிறார்

ரஜினிகாந்தின் புதிய படத்தை, மணிரத்னம் டைரக்டு செய்கிறார். 17 வருடங்களுக்குப்பின், இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

அபூர்வ ராகங்கள்

ரஜினிகாந்த் 1974-ம் ஆண்டு திரையுலகுக்கு வந்தார். அவரை, `அபூர்வ ராகங்கள்' படத்தில், டைரக்டர் கே.பாலசந்தர் அறிமுகம் செய்தார். 16 வயதினிலே, மூன்று முடிச்சு போன்ற படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், `பைரவி' படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார்.

மளமள என்று தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழி படங்களிலும் நடித்து, முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். அவருக்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பும், அவர் நடித்த படங்களின் வசூல் சாதனைகளும் சேர்ந்து, `சூப்பர்ஸ்டார்' அந்தஸ்துக்கு அவரை உயர்த்தின.

பாட்ஷா

ரஜினிகாந்த் நடித்த படங்களில், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம், `பாட்ஷா.' தமிழ் பட உலகில் பெரும் பரபரப்பையும், அபாரமான வசூல் சாதனையையும் செய்த படம் இது.

இதையடுத்து, ரஜினிகாந்த் நடித்து, மேலும் ஒரு வசூல் சாதனையை நிகழ்த்திய படம், 'படையப்பா.' இந்த படத்தை அடுத்து, சில வருட இடைவெளிக்குப்பின் அவர் நடித்து வெளிவந்த படம், `சந்திரமுகி.' இந்த படம், பாட்ஷா, படையப்பா ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்ததுடன், மிக அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை தக்கவைத்துக்கொண்டது.

சிவாஜி

ரஜினிகாந்த் நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த `சிவாஜி,' அவருடைய 152-வது படம் ஆகும். தமிழில், அவர் நடித்த 100-வது படம். இந்த படத்தை ஏவி.எம்.நிறுவனம் தயாரித்தது. ஷங்கர் டைரக்டு செய்தார். `சிவாஜி,' உலகம் முழுவதும் திரையிடப்பட்டு, மாபெரும் வசூல் சாதனை செய்தது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கூட்டம் போல் ரசிகர்கள் திரண்டனர்.

படம், 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. `சிவாஜி' பரபரப்பில் இருந்து ரசிகர்கள் இப்போதுதான் மெதுவாக சகஜ வாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறார்கள் என்றால், அது மிகையல்ல.

புதிய படம்

`சிவாஜி' சூடு ஆறுவதற்குள், ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கி விட்டார். அவர் நடிக்கும் புதிய படத்தை, மணிரத்னம் டைரக்டு செய்கிறார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்த், மணிரத்னம் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இரண்டு பேரும் மணிக்கணக்கில், மிக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மறுநாளும் அவர்களின் சந்திப்பு தொடர்ந்தது. 2 நாட்களாக ரஜினிகாந்தும், மணிரத்னமும் கதை விவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது.

தளபதி

இதற்கு முன்பு, 1990-ம் ஆண்டில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து, மணிரத்னம் டைரக்ஷனில், `தளபதி' என்ற படம் திரைக்கு வந்தது.

17 வருடங்களுக்குப்பின், ரஜினிகாந்தும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்கள். இரண்டு பிரமாண்டங்கள் மீண்டும் இணைவது, தமிழ் பட உலகில் பெரும் பரபரப்பையும், சுறுசுறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

அன்று, ரஜினிகாந்தை `தளபதி'யாக அறிமுகம் செய்த மணிரத்னம், புதிய படத்தில், `சக்கரவர்த்தியாக' உயர்த்தி, சித்தரிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் .
MAIN SOURCE:DAILYTHANTHI

0 comments: