

இப்போதைக்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இதைவிட சந்தோஷமான செய்தி எதுவும் இருக்க முடியாது. சில தினங்களுக்கு முன் தட்ஸ்தமிழ் வெளியிட்ட செய்தி விரைவில் உண்மையாகப் போகிறது.
ரோபோவுக்கு முன்பே மீண்டும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். அதுவும் முழு நீள ஆக்ஷன்- காமெடி சரவெடியில் கலக்கப் போகிறார்.
குசேலன் படம் பல விதங்களில் ரஜினிக்கு மன உளைச்சலையும் அவரது ரசிகர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவித்துவிட்டது.
இதைச் சரிகட்டும் விதத்திலும், தனது பாக்ஸ் ஆபீஸ் பலத்தை இன்னொரு முறை நிரூபித்துக் காட்டவும் இந்த அதிரடிப் படத்தை தர முடிவு செய்துள்ளாராம் ரஜினி.
இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் முருகதாஸ் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் எதையும் உறுதி செய்யவில்லையாம் ரஜினி.
எஸ்.ஜே.சூர்யாவும்கூட ரஜினிக்கு ஒரு அதிரடி ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார். ரவிக்குமார் இப்போதைக்கு ஜக்குபாய் படத்தை சரத்குமாரை வைத்து எடுப்பதால், அவரும் ரஜினியை இயக்க முடியாத நிலை. எனவே தனது நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம் ரஜினி.
படத்தை பஞ்சு அருணாச்சலம்-சத்யா மூவீஸ் ஆர்எம் வீரப்பன் இணைந்து தயாரிக்கப் போவது மட்டும் நிச்சயமாகிவிட்டது.
தள்ளிப் போகும் ரோபோ:
இதற்கிடையே ரோபோ படம் சில தொழில்நுட்ப விஷயங்களுக்காக சில தினங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாம். பிரேசில் நாட்டில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்படும் என்கிறார்கள்.
சௌந்தர்யா இயக்கிவரும் சுல்தான் தி வாரியர் வெளியாவதற்கு முன்பே இந்த புதிய படத்தை வெளியிடப் போகிறார்கள்.
ரசிகர்கள் கூட்டத்துக்கு தடை:
இந் நிலையில் சென்னையில் இன்று ரசிகர்கள் கூட்டம் நடத்தி `குலேசன்' பட பிரச்சினையில் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர்.
இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் இந்தக் கூட்டத்துக்கு வர இருந்தனர்.
ஆனால் இப்போதைய சூழ்நிலையில் இந்தக் கூட்டம் தேவையில்லை என்று ரஜினி தலைமை ரசிகர் மன்றம் தடை விதித்துவிட்டது.
மேலும் வெளிமாவட்ட ரசிகர்கள் யாரும் சென்னை வர வேண்டாம் எனவும் இன்னொரு நாள் சந்தித்து பேசலாம் என்றும் மன்றத் தலைவர் சத்தியநாராயணன் மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.